சஷி வீரவன்சவின் இரண்டு வருட தண்டனை உறுதி
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், பிரதிவாதிக்கு மேலதிகமாக 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் 18-11-2026 அன்று உறுதி செய்தது.
குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டைப் பரிசீலித்ததன் பின்னர், அதனை நிராகரித்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையான சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அவரைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பணித்தது.
போலியான தகவல்களைச் சமர்ப்பித்து முறைகேடான முறையில் இராஜதந்திரக் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், பிரதிவாதிக்கு மேலதிகமாக 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகையிலிருந்து தம்மைக் குற்றமற்றவராக விடுதலை செய்யுமாறு கோரி சஷி வீரவன்சவினால் இந்த மேன்முறையீட்டு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இராஜதந்திர கடவுச்சீட்டைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்துச் செய்து, தம்மை அக்குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதியாக விடுதலை செய்யுமாறு கோரி ரணசிங்க முதியன்சேலாகே ஷிர்ஜா உதயந்தி என்கிற சஷி வீரவன்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் 2026 ஜூன் 11 ஆம் திகதி நிராகரித்திருந்தது.
அந்த தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீட்டாளரான பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





