எயார் பஸ் கொள்வனவு; குற்றப்பத்திரம் பிரதிவாதியிடம் கையளிப்பு
மேல் நீதிமன்ற நீதியரசர், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 (2) ஆம் பிரிவுக்கு அமையப் பிணை வழங்குவதற்காக விசேட விடயங்கள் முன்வைக்கப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
எயார் பஸ் கொள்வனவின் போது இடம்பெற்ற இலஞ்ச கொடுக்கல் வாங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுபி்னர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் பிரதிவாதியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
வழக்கு 19-11-2026 அன்று அழைக்கப்பட்ட போது நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா மன்றில் விடயங்களை முன்வைக்கையில், பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்போது நிறைவடைந்துள்ளதால், அவரது சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலான உத்தரவு எதனையும் பிறப்பிக்க வேண்டாம் என மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடயங்களை முன்வைக்கையில், இந்தப் பிரதிவாதிக்கு எதிராக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அச்சட்டத்தின் 149 (1) ஆம் பிரிவுக்கு அமைய, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்ததலையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள நிலையில், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாயின் விசேட சூழ்நிலை சார்ந்த விடயங்கள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே பிணை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், இதுவரையில் இந்த பிரதிவாதிக்குப் பிணை வழங்குவதுக்கான விசேட சூழ்நிலை சார்ந்த விடயங்கள் எவையும் முன்வைக்கப்படாத காரணத்தால், பிரதிவாதியை விளக்கமறியலில் வைப்பதைத் தவிர நீதிமன்றிற்கு வேறு மாற்று வழியில்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 (2) ஆம் பிரிவுக்கு அமையப் பிணை வழங்குவதற்காக விசேட விடயங்கள் முன்வைக்கப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பிணைச் சட்டம் பொருந்தாது எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அதற்கமைய இந்தத் தருணத்தில் விசேட விடயங்கள் எவையும் முன்வைக்கப்படாத காரணத்தால், பிரதிவாதியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம் என அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.





