கண்ணியமான வசிப்பிடத்தை கட்டியெழுப்பத் தேவையான சக்தியை வழங்குவது அரசாங்கத்தின் இலக்கு - பிரதமர் ஹரிணி
இதற்காக ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக முறையை நிறுவி, மனித மற்றும் பிராந்திய பண்புகளைக் கருத்திற்கொண்டு வீடுகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூகத்தின் உண்மையான பங்களிப்புடன், அனைவருக்கும் தங்களுக்கான கண்ணியமான வசிப்பிடத்தைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தியை வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும்.அதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் வசதிகளை வழங்குவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 உலக மனிதக் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு திட்டத்திற்கு அமைவாக 'தேவைக்கு ஏற்ப - அனைவருக்கும் நிழல்' எனும் தொனிப்பொருளின் கீழ் நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் 05-10-2026அன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக மனிதக் குடியிருப்பு தின விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், உண்மையிலேயே ஒரு வீடு என்றால் என்ன என்று. ஒரு வீடு என்பது வெறும் செங்கற்கள்சிமெந்து, மணல் ஆகியவற்றைச் சேர்த்து கட்டப்படும் ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல. ஒரு வீடு என்பது மனிதனின் அடிப்படை மனித உரிமை,கண்ணியம், பாதுகாப்பு மற்றும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி தங்கியுள்ள அன்பான அமைப்பாகும்.
இதுவரை காலத்தில் நமது நாட்டில் இருந்த அரசாங்கங்கள் ஏதேனும் ஒரு உதவியை வழங்கி,மக்களைப் பயனாளிகளாக மட்டுமே மாற்றிய பாரம்பரிய முறையிலிருந்து நமது அரசாங்கம் முற்றிலுமாக விலகுகிறது. அரசாங்கம் என்பது வழிகாட்டுகின்ற, தேவையான வசதிகளைச் செய்து தருகின்ற ஒரு தரப்பு மட்டுமே. நமது ஒரே இலக்கு, சமூகத்தின் உண்மையான பங்களிப்புடன், அனைவருக்கும் தங்களுக்கென ஒரு கண்ணியமான வசிப்பிடத்தைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தியை வழங்குவதாகும்.
இந்த நோக்கத்திற்காக, நமது எதிர்கால நிலையான வீடமைப்புப் கொள்கைக்காக 09 அடிப்படைக் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட பல புதிய கொள்கை மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, வீடமைப்பு என்பதைப் பிரஜையின் அடிப்படை மனித உரிமையாகவும்இ தனிமைப்படுத்தப்பட்ட அலகுகளாக அல்லாமல் முழு குடியிருப்பு அமைப்பின் முக்கிய பகுதியாகவும் நாங்கள் கருதுகிறோம். இதற்காக ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக முறையை நிறுவி, மனித மற்றும் பிராந்திய பண்புகளைக் கருத்திற்கொண்டு வீடுகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு பிரஜையையும் கைவிடாமல், தரவு அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்துவதும், சுற்றாடல் பேண்தகைமை, உயர்தர நிர்மாண நிலை மற்றும் பொருளாதாரத்திற்குத் தாங்கக்கூடிய வீடமைப்பு அமைப்பைக் கட்டியெழுப்புவதும் நமது நோக்கமாகும்.
அத்துடன் 'குடியிருப்பு மறுமலர்ச்சி நாள்' எனப் பெயரிட்டு, குறைந்த வசதிகளைக் கொண்ட நகரக் குடியிருப்புகளின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கூட திட்டங்கள் தொடங்கப்பட்டன. நீர் வசதியற்ற குடியிருப்புகளுக்குக் குழாய் நீர் வசதிகளை வழங்குதல் மற்றும் பல சமூக நீர் திட்டங்களைத் திறந்து வைப்பதும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சமூக சிரமதான பங்களிப்புடன் வீடுகளைக் கட்டுதல் மற்றும் வடக்கு-கிழக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்குவதும் மேற்கொள்ளப்பட்டது என்றார்.





