அனுருத்த அபயரத்னவுக்கு, 16 வருட கடூழிய சிறை
அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெறப்பட்ட 375,000 ரூபா தொகையை அபராதமாக அறவிடுமாறும் உத்தரவிட்டார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து வருடாந்தம் அறவிடப்பட வேண்டிய வரித் தொகையை குறைத்து மதிப்பிடுவதற்காக நான்கு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி, அதில் 375,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மதிப்பீட்டாளராகக் கடமையாற்றிய ராஜபக்ஷ முதியன்சேலாகே அனுருத்த அபயரத்ன என்பவருக்கு, 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, அச்சிறைத் தண்டனை 4 வருடங்களில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் விஹால் உத்தரவிட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெறப்பட்ட 375,000 ரூபா தொகையை அபராதமாக அறவிடுமாறும் உத்தரவிட்டார்.
குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், 14 மாத மேலதிக சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டதுடன், இலஞ்சச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையப் பிரதிவாதிக்கு ஏழு வருட காலத்திற்கு அவரது சிவில் உரிமைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். இலஞ்ச சட்டத்தின் 29 ஆவது பிரிவின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய நிறுவனங்களுக்கு அது குறித்து அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றிய குறித்த பிரதிவாதி, 2011 ஆம் ஆண்டில் ஹேமஜித் உபுல்தெனிய என்பவரிடம் குறித்த இலஞ்சத் தொகையைக் கோரியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த ஜலீலா பேகம் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 2019 ஆம் ஆண்டில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதலாவது பிரதிவாதி குற்றத்தை மறுத்தமையால் வழக்கு விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
தனது சேவைபெறுநர் 40 வருட அரச சேவையாளராகக் கடமையாற்றியுள்ளதாகவும், அவரது முதுமை மற்றும் சுகவீன நிலையைக் கருத்திற்கொண்டு லேசான தண்டனை வழங்குமாறும் பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குரிய பிரதான நிறுவனங்களில் ஒன்றான மற்றும் மக்களிடமிருந்து வரிப் பணத்தை அறவிடும் பிரதான நிறுவனமான அதனுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது மக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளின் அடிப்படையில், பிரதிவாதத் தரப்பு கோருவது போன்று லேசான தண்டனைகளை வழங்க முடியாது எனவும், இவ்வாறான தவறுகளை இழைக்க எண்ணுவோருக்கும் முன்னுதாரணமாக அமையும் வகையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். எனினும், பிரதிவாதியின் முதுமை மற்றும் சுகவீன நிலையைக் கருத்திற்கொண்டு 16 வருட சிறைத் தண்டனை விதிப்பதாகவும், அத்தன்டனையை ஏககாலத்தில் நான்கு வருடங்களில் அனுபவிக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.





