ஈராக்கில் பெண்கள் வகுப்பறைகளில் ஆண் பேராசிரியர்களுக்கு தடை: 400 மாணவிகள் போராட்டம்
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களிடம், படிப்பதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள அல்-காதிசியா பல்கலைக்கழகத்தில், பாலின அடிப்படையிலான கட்டாயப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கான வகுப்புகளில் இருந்து ஆண் பேராசிரியர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக சுமார் 400 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை தலிபான்களின் கட்டுப்பாடுகளைப் போன்ற பாலினப் பிரிவினை நடைமுறையாக ஒப்பிடப்படுகிறது.
குடும்பத்தினரின் கோரிக்கைகளின் அடிப்படையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கலப்பைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் பட்டப்படிப்புக்கான இறுதித் திட்டப் பணிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களிடம், படிப்பதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தசம்பவம், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விதித்துள்ள தடைகளுடன் ஒப்பிடப்படுகிறது. அங்கு பெண்கள் இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி பெறுவதற்குத் தலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இத்தகைய தடைகள் பெண்களின் கல்வி வாய்ப்புகளை மிகக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதாக யுனெஸ்கோ (UNESCO) கண்டனம் தெரிவித்துள்ளது.





