ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலல்ல - நீதியமைச்சர் அறிவிப்பு
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலை ஒழித்தால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. அரச நிதியை கொள்ளையடித்து விட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விமர்சிப்பது பயனற்றது. நீதிமன்ற கட்டமைப்பில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நாட்டில் உள்ள சகல நீதிமன்ற நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படு மென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சிறந்த மற்றும் அறிவுபூர்வமான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் வெறுப்பு, பொறாமை மற்றும் வைராக்கியத்துடனான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் ஏற்க முடியாது. எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெறுப்பை முன்னிலைப்படுத்தியே தற்போது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலை ஒழித்தால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் ஊழலை வைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு அரசாங்கத்தின் ஆணைக்குழு என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரச நிறுவனமாகும். இந்த ஆணைக்குழு கடந்த காலங்களில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தடையாக அரசியல் தலையீடுகள் காணப்பட்டன.தற்போது அவ்வாறான நிலைமை கிடையாது.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அரச நிதியை மோசடி செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஊழல் செய்து விட்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்டுவது முறையற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நீதியை பெறுவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நாட்டில் உள்ள சகல நீதிமன்ற நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.சிறந்த மறுசீரமைப்புக்காக கடுiமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றார்.





