இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை வியப்பளிக்கிறது! பிரதமர் மோடியுடனான உரையாடலை நினைவுகூர்ந்து புதின் பாராட்டு
இந்திய நாகரிகம் தொன்மையானதும் மிகவும் சுவாரசியமானதுமாகும் என்றும் புதின் வர்ணித்தார்.
இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தையும் அதன் மொழிப் பன்முகத்தன்மையையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை "வியக்கத்தக்கது, உண்மையிலேயே வியக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான அண்மைய உரையாடலை நினைவுகூர்ந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமிர் குஸ்தூரிகாவுக்கு அளித்த நேர்காணலில், இந்திய நாகரிகத்தின் செழுமை குறித்துப் பேசிய புதின், இந்தியாவில் நிலவும் மொழிப் பன்முகத்தன்மை தமக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
இந்தியாவில் முதன்மையான மொழியை எத்தனை பேர் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடியிடம் தாம் கேட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவில் சுமார் 60 கோடி பேர் அந்த முதன்மை மொழியைப் பேசுவதாகவும், நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 150 கோடி என்றும் தெரிவித்ததாகப் புதின் கூறினார்.
இதன் பொருள், இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் தங்களுக்குரிய மொழிகளைப் பேசுகின்றனர். எஞ்சிய மூன்றில் ஒரு பங்கினர் நாட்டின் முதன்மை மொழியைப் பேசுகின்றனர் என்று புதின் விளக்கினார்.
"இது வியப்புக்குரியது அல்லவா? உண்மையிலேயே வியப்புக்குரியது!" என்று குறிப்பிட்ட ரஷ்ய அதிபர், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைப் பாராட்டினார்.
ரஷ்யாவுடன் ஒப்பிட்டுப் பேசிய புதின், ரஷ்ய நாகரிகம் பல்வேறு மக்கள் குழுக்களும் இனக்குழுக்களும் தங்களது மதங்கள், மரபுகள், மொழிகள் மற்றும் ஆன்மிக அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனுமதித்துள்ளதாகக் கூறினார். இதுவே ரஷ்ய நாகரிகத்தின் தனித்துவமான சிறப்பம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ரஷ்ய நாகரிகம் ஒருபோதும் யாரையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததில்லை" என்று கூறிய புதின், ரஷ்ய சமூகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களை அணுகும் முறையைச் சுட்டிக்காட்டினார்.
இந்திய நாகரிகம் தொன்மையானதும் மிகவும் சுவாரசியமானதுமாகும் என்றும் புதின் வர்ணித்தார். அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ளும்போது, அதன் மீதான தனது ஆர்வமும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான அண்மைய உரையாடல், இந்தியாவின் கலாசார மற்றும் மொழிசார் செழுமை குறித்த தனது புரிதலையும் பாராட்டையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் கூறினார்.





