கிராமீன் வங்கியின் மீதான தாக்குதல்கள் வங்கியை மட்டுமல்ல, ஏழைப் பெண்களையும் குறிவைக்கின்றன: யூனுஸ்
இந்த தாக்குதல்களின் போது, 'ஜய் பங்களா' என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் முன்னாள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், கிராமீன் வங்கி மற்றும் நாட்டில் உள்ள பிற சொத்துகளைக் குறிவைத்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் திட்டமிட்ட தீவைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் மட்டும், சிறுநிதி சேவை வழங்கும் இந்த நிறுவனத்தின் ஏறத்தாழ 100 கிளைகள் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களே இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக யூனுஸ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது, 'ஜய் பங்களா' என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டோகிராமில் உள்ள தனது சொந்த வீடும் தாக்குதலுக்கான இலக்குகளில் ஒன்றாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கிராமீன் வங்கியின் கிளைகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லம் மற்றும் காவல் நிலையங்கள் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று யூனுஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், கிராமீன் வங்கிக்கு ஆதரவளிக்கும் சர்வதேச அமைப்புகளும் தனிநபர்களும் இந்த வன்முறைகளுக்கு எதிராகத் தங்களது குரலை எழுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





