இலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவதானம்
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின் போது இந்த முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இரு நாட்டு உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவிற்கும் 24-11-2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் விசா இன்றிப் பயணிப்பதற்கு வழிவகுக்கும் வகையில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின் போது இந்த முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





