செப்டம்பரில் கல்கரியில் வீடுகள் விற்பனை 3.8 விழுக்காடு சரிவு
தனித்தனி வீடுகளின் விலை ஒரு விழுக்காடு குறைந்து 7,39,400 கனடிய டாலராக உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், கனடாவின் கல்கரி நகரில் செப்டம்பர் மாத வீடுகள் விற்பனை 3.8 விழுக்காடு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக வீடுகளின் விலைகளும் சற்றுக் குறைந்துள்ளன.
கடந்த மாதம் 1,650 வீடுகள் விற்பனையாகியுள்ளன. குடியிருப்பு வீடுகளுக்கான குறியீட்டு விலை 0.8 விழுக்காடு குறைந்து, 5,66,700 கனடிய டாலராக உள்ளது.
வலுவான வேலைவாய்ப்பு சந்தையும், மெதுவாக இருந்தாலும் நேர்மறையாகத் தொடரும் நிகரக் குடியேற்றமும் வீடுகளுக்கான தேவையைத் தக்கவைத்துள்ளதாக பொருளாதார நிபுணர் ஆன்-மேரி லூரி தெரிவித்துள்ளார். இதனால், சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள வீடுகளில் ஒரு பகுதியை வாங்குவோர் வாங்கி வருகின்றனர். இருப்பினும், அதிக அடர்த்தியுள்ள குடியிருப்புகளின் வரத்து அதிகரித்திருப்பதால், அவற்றின் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் விளைவாக, பல குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டட வீடுகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 8.3 விழுக்காடு குறைந்து 2,91,400 கனடிய டாலராக உள்ளது. வரிசையாக இணைக்கப்பட்ட வீடுகளின் விலை 5.5 விழுக்காடு சரிந்து 4,12,400 கனடிய டாலராக உள்ளது.
தனித்தனி வீடுகளின் விலை ஒரு விழுக்காடு குறைந்து 7,39,400 கனடிய டாலராக உள்ளது. இரட்டைக் குடியிருப்பு வீடுகளின் விலை, 2025 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 0.1 விழுக்காடு உயர்ந்து 6,85,200 கனடிய டாலராக உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்காக 3,354 புதிய வீடுகள் பட்டியலிடப்பட்டன. இது ஓராண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 11.3 விழுக்காடு குறைவாகும். விற்பனைக்குக் கிடைத்த மொத்த வீடுகளின் எண்ணிக்கையும் 6.3 விழுக்காடு குறைந்து 6,486 ஆக இருந்தது.





