ரியாத் நிதி மையம் மீது ஹூதிகள் தாக்குதல்: இரு இந்தியர்கள் உட்பட 11 பேர் காயம்
காயமடைந்தவர்களில் இரு இந்தியர்கள், இரு சவூதி அரேபியர்கள், மூன்று நேபாள நாட்டினர் மற்றும் நான்கு எகிப்தியர்கள் அடங்குவர் எனச் சவூதி குடிமை தற்காப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஏமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சிப் படையினர் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள நிதி மையப் பகுதியில் அமைந்துள்ள உயரமான கட்டடம் ஒன்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில், இரு இந்தியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்ததாகச் சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இரு இந்தியர்கள், இரு சவூதி அரேபியர்கள், மூன்று நேபாள நாட்டினர் மற்றும் நான்கு எகிப்தியர்கள் அடங்குவர் எனச் சவூதி குடிமை தற்காப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அத்துறை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், ரியாத் நகரின் நிதி மையத்தில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றின் மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ரியாத் நகரின் நிதி மையத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது ஹூதி பயங்கரவாதக் கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் இரு சவூதி குடிமக்கள், இந்திய நாட்டைச் சேர்ந்த இருவர், நேபாள நாட்டைச் சேர்ந்த மூவர் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த நால்வர் அடங்குவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இந்தியர்களின் பெயர் விவரங்களையோ, அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதன் தீவிரம் குறித்த விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.





