சபரிமலையில் ஒரே வாரத்தில் 29 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர், இரவு நேரங்களிலும் ஆய்வு நடத்தி கடைகளில் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.
சபரிமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், விதிமுறைகளை மீறிய 29 கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், சமையலறைகளைத் தூய்மையாகப் பராமரிக்காதது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர், இரவு நேரங்களிலும் ஆய்வு நடத்தி கடைகளில் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, கெட்டுப்போன உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், எடையில் முறைகேடு செய்தல் போன்ற புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களும் இந்த நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் நவம்பர் நடுப்பகுதியிலிருந்து ஜனவரி இறுதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு விழாவும் நடைபெற உள்ளன.





