உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; பாதுகாப்பளித்தால் வாக்குமூலம் அளிப்போம் - மில்கான், ரிஸ்கான் தெரிவிப்பு
அரச உளவுச் சேவையின் அதிகாரியான மொஹமட் பரீசினுடைய வாக்குமூலத்தில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் முன்னாள் அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே உள்ளிட்டவர்களுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
25-11-2026 அன்று இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளோடு நீதிமன்றில் ஆஜராகி இது தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தினார்.
கடந்த தவணை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, தற்போதும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் தண்டனை அனுபவிக்கும் மில்கான் மற்றும் ரிஸ்கான் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ள சிறைச்சாலைக்குச் சென்றதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, ரிஸ்கானும் மில்கானும் தமது குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்களுக்கும் தமக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பட்சத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தி வாக்குமூலம் அளிக்கத் தயார் எனத் தெரிவித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார். அதன்படி, குறித்த இருவரின் பாதுகாப்பும் அவர்களது குடும்பத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளைத் தான் வழங்கியுள்ளதாகத் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை விட மேலும் பல முக்கியமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளில் அரச உளவுச் சேவையின் 4 முக்கிய அதிகாரிகளின் வாக்குமூலங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் பதிவு செய்துள்ளது. நுவான் மதுமகே, மொஹமட் பரீஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிரோஷன் குணவர்தன, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோகிணி ஆகியோரின் வாக்குமூலங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதில் அரச உளவுச் சேவையின் அதிகாரியான மொஹமட் பரீசினுடைய வாக்குமூலத்தில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சஹரான் உள்ளிட்ட குழுவினர் 2018 ஒக்டோபர் மாதம் அளவில் பயிற்சிகளை முன்னெடுப்பதாகவும், அவர்கள் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் எனவும் 'தம்பி - அண்ணன்' எனும் தகவலாளி ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலை மொஹமட் பரீஸ் எனும் அரச உளவுச் சேவை அதிகாரி தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக திலீப் பீரிஸ் குறிப்பிட்டார்.





