சட்ட விரோத சொகுசு கார் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபரதம்
அரச சட்டத்தரணி , "மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கட்டளைச் சட்டத்தின் கீழேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன."
சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை கொள்வனவு செய்து, அவற்றை பொருத்தி தயாரிக்கப்பட்ட ஜேர்மன் தயாரிப்பான பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தமை வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும், நீதிமன்றத்தின் முன் ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு, 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு குறித்த வாகனத்தையும் அரசுடமையாக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய முதலாவது குற்றச்சாட்டிற்கு 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஒரு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 1 இலட்சம் ரூபா அபராதமும், அதனைச் செலுத்தத் தவறின் 6 மாத கால சிறைத்தண்டனை வித்திருந்ததோடு, ஒரு மாத கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான், அதனைச் செலுத்தத் தவறின் மூன்று மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சமதரி பிரியசே விடயங்களை முன்வைக்கையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை, கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றின் சான்றுப் பொருளாகப் பெயரிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், முறைப்பாட்டாளர் தரப்பிடமும் பிரதிவாதித் தரப்பிடமும் நீதிவான் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கைமைய, "இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பிரதிவாதி கைது செய்யப்பட்ட காலப்பகுதியில், அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தாரா ? என வினவினார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அக்காலப்பகுதியில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியதாகத் தெரிவித்தார்.
நீதிவான்:, "இந்த வழக்குடன் தொடர்புடைய வாகனம் தற்போது எங்கே உள்ளது?
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், “ 2024.11.11 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த வாகனத்தைத் தமது பொறுப்பேற்றது. தற்போது அது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலேயே உள்ளது."
நீதிவான், "இச்சம்பவம் தொடர்பில் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனவா?"
அரச சட்டத்தரணி , "மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கட்டளைச் சட்டத்தின் கீழேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன."
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், "சுங்க அனுமதியின்றி வாகனத்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது."
ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் விடங்களை முன்வைக்கையில், இச்சம்பவம் தொடர்பில் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 3 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் மற்றுமொரு நபருக்கு எதிராகவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னைய வழக்குத் தவணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டோம்" என்றார்.





