திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்யுங்கள் - கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை போன்று செயற்படாமல் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 25-11-2026 அன்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும் இம்முறை அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுகாதார துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் வெளிப்படையாக விளங்குகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாகாண சபைகளுக்கான நிதியில் 930 மில்லியன் ரூபா சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு 2025ஆம் ஆண்டில் அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது அந்த வைத்தியசாலை தொடர்பான குறைபாடுகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது. இதன்போது 2026ஆம் ஆண்டில் நிதியை ஒதுக்குவதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் இம்முறை அவர் முறையாக செய்வார் என்று நம்புகின்றோம்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளுக்கும் பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திருக்கோவில் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட போதும், நிதி ஒதுக்கப்படாமல் திட்டமிட்டவாறு புறக்கணிக்கப்பட்டது. அந்த வைத்தியசாலைக்கு வந்த நிதி வேறு வைத்தியசாலைகளுக்கு சென்றது. வெளிநாட்டு நிதிகளும் அதற்கு வந்த போதும் அது வேறு வைத்தியாசலைகளுக்கே சென்றன. இந்த அரசாங்கத்தில் இதுபோன்ற செயற்பாடு நடக்காது என்று நாங்கள் நம்புகின்றோம். அம்பாறை மாவட்டத்தில் பல வைத்தியசாலைகள் இருக்கின்றன. அவை குறைபாடுகளுடனேயே இருக்கின்றன. அவை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். மாகாண வைத்திசாலைக்கான சுகாதார உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகமாக இருக்கின்றன. அவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





