இலங்கையின் போர்க்கால மீறல்கள் குறித்து ஐ.நா புதிய அறிக்கை
உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தோல்வியடையும் பட்சத்தில், சர்வதேச விசாரணைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கவும் இவ்வறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
'நான் பலமுறை இறந்தேன்: இலங்கையில் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 40 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல என்றும், அவை ஒரு தொடர்ச்சியான போக்கின் பகுதியாகவே அமைந்திருந்தன என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய தரப்பினர் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை நடத்த அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தவறிவிட்டதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2006 ஜனவரியில் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, 2006 ஆகஸ்டில் மூதூரில் 'அக்ஷன் கான்ட்ரே லா ஃபெய்ம்' நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை, 2009 ஜனவரியில் ஐ.நா மனிதாபிமான வாகனத் தொடரணி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் 2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை ஆகிய நான்கு முக்கிய சம்பவங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த நான்கு சம்பவங்களிலும் இதுவரை எவருக்கும் எதிராகக் குற்றவியல் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியமை உள்ளிட்ட தனது சொந்த நிறுவன ரீதியான தோல்விகளையும் ஐ.நா இதில் ஏற்றுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சுயாதீன வழக்குத் தொடுநர் பொறிமுறையை நிறுவுதல், போர்க்குற்றங்களை உள்நாட்டுச் சட்டத்தில் உள்ளடக்குதல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இணைதல் ஆகியவற்றை ஐ.நா பரிந்துரைத்துள்ளது. உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தோல்வியடையும் பட்சத்தில், சர்வதேச விசாரணைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கவும் இவ்வறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வறிக்கை தொடர்பில் கருத்துக்களைக் கோரி இலங்கை அரசாங்கத்திடம் முன்கூட்டிய பிரதி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அறிக்கை வெளியிடப்படும் வரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





