ஞானசாரதேரரின் காவியுடை - நிட்டம்புவவுக்கு இன்று பாதயாத்திரை
அவர் சிறைகைதியின் உடையுடன் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டமைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் அரசியல் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி தலதா மாளிகையில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்த தேரர்கள் குழுவினர் இன்று வரக்காபொல – நிட்டம்புவ பகுதியை வந்தடையவுள்ளனர்.
தேரர்கள் குழுவினர் நாளை மறுதினம் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளதுடன், அவர்கள் வெலிகட சிறைச்சாலை முன்பாக ஒன்றுகூடி ஞானசார தேரருக்காக விசேட பிரித் பூஜையில் ஈடுபடவுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்புக்காக நீதிமன்றத்தால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டு அவர் சிறைகைதியின் உடையுடன் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டமைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் அரசியல் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் சிறையில் உள்ள பௌத்த பிக்குகளிள் ஆடை தொடர்பில் உரிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழு எதிர்வரும் வாரம் விரிவான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பு பௌத்த தேரர்களில் ஒருதரப்பினர் கடந்த சனிக்கிழமை கண்டி தலதா மாளிகையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பாதயாத்திரையை முன்னெடுத்துள்ளனர்.இதற்கமைய இன்று நான்காவது நாளாக தேரர்கள் வரக்காபொல- நிட்டம்புவ பகுதிக்கு வருகைத்தரவுள்ளனர்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 50 இலட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளில் பௌத்த தேரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





