நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றியம் போராட்டம்
ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்குமாறு சுகாதாரத் தொழிற்சங்கங்கள் வழங்கிய கடிதத்துக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள கொடுப்பனவு குறைப்பு மற்றும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி 26-11-2026 அன்று நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றியம் இரு மணித்தியால அடையாள தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
அத்தோடு தமது கோரிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அச்சங்கத்தின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 12 ஆம் திகதி அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
அதற்கமைய, 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிறுத்தப்பட்ட அடிப்படைச் சம்பளத்தில் 1/20 பங்கான வார இறுதி மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளையும், 1/160 பங்கான மேலதிக நேரச் சேவைக் கொடுப்பனவுகளையும் உடனடியாக மீள நிறுவுதல், சுகாதார மற்றும் நிதி அமைச்சுக்களின் தொழில்நுட்ப அறிக்கைக்கு அமைய டெட் கொடுப்பனவிற்கு ஏற்ப விசேட கடமைக் கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்குமாறு சுகாதாரத் தொழிற்சங்கங்கள் வழங்கிய கடிதத்துக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதற்கமைய வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள், தமக்கு குறைக்கப்பட்ட கொடுப்பனவுகளையும், உரிமைகளையும் மீள தமக்குப் பெற்றுத்தருமாறு கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்படி தொழிற்சங்க நடவடிக்கையில் அரச மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானிகள், அரச கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளுநர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியம் என சுமார் 15 சுகாதாரத் துறையைச் சேர்ந்த வெவ்வேறு தொழிற்சங்கங்கள் கைகோர்த்திருந்தன. இரு மணித்தியால அடையாள தொழிற்சங்க நடவடிக்கையால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதந்த நோயாளர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.





