தீபத்தூண் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சனிக்கிழமை கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சனிக்கிழமை கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நவம்பர் 25ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து எடுக்கப்படும் சுடரைக் கொண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தமிழக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை அனுப்பியதுடன், மாநில அரசையும் அதிகாரிகளையும் மிகக் கடுமையான சொற்களால் கண்டித்தது. தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இருந்த முடிவு, நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறிய செயலாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு கையாளப்பட வேண்டும் என்றும், அவை அரசியலமைப்பு ரீதியான குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தது.
தீபத்தூண் தீபம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த முக்கியமான கடுமையான கருத்துகள்:
• “அரசியலமைப்பு ரீதியான குழப்பத்துக்கு இது வழிவகுக்கும் என்பதால், நிலைமையை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
• “தீபத்தூணில் தீபம் ஏற்றத் தவறியதையும், அதனுடன் தொடர்புடைய தீர்மானத்தையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அப்பட்டமாக மீறியிருப்பது முதற்கட்டப் பார்வையிலேயே தெளிவாகிறது.”
• “இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு, நீதிமன்றமே அதனை மாற்றியமைக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பாகாது.”
• “அரசியலமைப்பின் அதிகாரத்துடன் நீதிமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பு ஆணையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும், தவறான இரக்கத்துக்கு இடமளிக்காமல் உறுதியாகக் கையாளப்பட வேண்டும்.”
• “யாராவது அரசியலமைப்பு ரீதியான குழப்பத்தை உருவாக்க முயன்றால், அதை நாங்கள் சரிசெய்வோம்.”
• “தமிழகத்தில், குறைந்தபட்சம் மதுரை மாவட்டத்திலாவது நிர்வாகக் குழப்பம் நிலவுவதாகத் தெரிகிறது. நிர்வாக அதிகாரிகள் தங்களது அரசியல் தலைவர்களின் உத்தரவுகளின்படி செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது.”
• “மாவட்ட ஆட்சியர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு வியப்பளிக்கிறது. உத்தரவைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு விரிவான அதிகாரங்களும் போதிய அதிகார வரம்பும் உள்ளன.”
• “நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த மாட்டோம் என்று அறங்காவலர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மற்ற அதிகாரிகளின் துணையுடன் அவர்கள் செய்துள்ள இந்தச் செயல் மிகக் கடுமையான விதிமீறலாகும்.”
• “நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் முயற்சி ஒருபோதும் அனுமதிக்கப்படாது. இதைத்தான் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.”
• “தர்காவிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் (சனிக்கிழமை) ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கிறோம். தர்காவைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் காவல் படை மேற்கொள்ள வேண்டும்.”





