ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் அசோக அபேசிங்க விலகல்
உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு 12-10-2026 அன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் தொகுதி பிரதான அமைப்பாளர் பதவி உட்படத் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக அபேசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு 12-10-2026 அன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் தான் வகித்து வந்த குருநாகல் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் பதவி, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர், ஐக்கிய ஊழியர் சங்கத்தின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்கக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த காலம் முதற்கொண்டும், ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இதுவரை காலமும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.





