இத்தாலியில் பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை
மாணவர் வயது குறைந்தவராக இருந்தால், அதற்குப் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
புர்கா, நிகாப் உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை மாணவர்கள் பள்ளிச் செயல்பாடுகளின்போது அணிவதற்கு தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய கல்வி சீர்திருத்தச் சட்டத்துக்கு இத்தாலி நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. யூரோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தத் தடையை மீறுவோருக்கு அதிகபட்சமாக 1,000 யூரோ (சுமார் 1,100 அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்படும். மாணவர் வயது குறைந்தவராக இருந்தால், அதற்குப் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், பள்ளிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளில் வெளிநாட்டு பூர்வீகம் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டுப் பெற்றோருக்கு இத்தாலிய மொழிப் பயிற்சி வழங்குவதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டுக் குடும்பங்கள் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அரசு ஊக்குவிப்பதாக அவை குற்றம்சாட்டியுள்ளன.





