பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
இதன் மொத்தச் செலவில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.245 கோடியும், மின்னூல்கள் உள்ளிட்ட நூல்களுக்காக ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தன.
கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததாகச் செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
சமூக சீர்திருத்தவாதியும் பெரியார் எனப் பிரபலமாக அறியப்பட்டவருமான ஈ.வெ. ராமசாமியின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த எட்டு மாடிக் கட்டடம், ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு கல்வி, அறிவியல் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டம் முந்தைய திமுக அரசால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது. இதன் மொத்தச் செலவில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.245 கோடியும், மின்னூல்கள் உள்ளிட்ட நூல்களுக்காக ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தன.
திறப்பு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்தார். இந்தத் திட்டம் தனது ‘திராவிட மாடல் அரசின்’ சிந்தனையில் உருவானது என்று அவர் குறிப்பிட்டார்.





