இலங்கை விவசாய, உணவு ஏற்றுமதி துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு
அண்மைய மாற்றங்கள் மற்றும் இலங்கையின் விவசாய, உணவு ஏற்றுமதியில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் விவசாய மற்றும் உணவு ஏற்றுமதித்துறையைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறைப் பங்காளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கினை பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகம் கடந்த வாரம் நடத்தியது.
பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகம் கடந்த 6 ஆம் திகதி இலங்கையின் வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொழில்முனைவோர், விவசாயம் மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெறும் குழு திட்டம் என்பன இணைந்து, இலங்கையின் விவசாய மற்றும் உணவு ஏற்றுமதித்துறையைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறைப் பங்காளர்களுக்காக நிகழ்நிலை முறைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தின.
இக்கலந்துரையாடலின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பூச்சிக்கொல்லி உச்சபட்ச தாங்குதிறன் அளவு கொள்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் மற்றும் இலங்கையின் விவசாய, உணவு ஏற்றுமதியில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் சந்தன வீரசேன மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் நாயகம் சோமசேன மஹதியுல்வௌ ஆகியோரின் தொடக்க உரையுடன் இந்த நிகழ்நிலை கருத்தரங்கு ஆரம்பமானது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மாறிவரும் ஒழுங்குமுறைத் தேவைப்பாடுகள் குறித்து இலங்கை ஏற்றுமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும், ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான அணுகலைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
2026 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பூச்சிக்கொல்லி உச்சபட்ச தாங்குதிறன் அளவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்ற சாத்தியமான புதிய விதிகள் குறித்த விவாதங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த விவாதங்களுக்கான காரணங்கள், பரிசீலனையில் உள்ள முன்மொழிவுகள், எதிர்பார்க்கப்படும் காலக்கெடு மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் என்பன இதில் உள்ளடங்கியிருந்தன.





