கடன்மறுசீரமைப்பு தவிர வேறு வழியில்லை - சர்வதேச நாணய நிதியம்
பணவீக்கமும் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கங்களைக் குறைந்த வருமானம் பெறும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில் செலவினங்களைக் குறைப்பதையோ அல்லது கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதையோ தவிர இதனைக் கையாள்வதற்கு வேறு வழிகள் இல்லை என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாங்கொக்கில் நடைபெற்றுவரும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டத்துக்கு மத்தியில் சர்வதேச ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுப்பிரிவு துணை இயக்குநர் பெத்யா கொயேவா புரூக்ஸ், அதிக கடனில் உள்ள மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்ட நாடுகள் இந்த நெருக்கடியிலிருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்கு கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
'துரதிஷ்டவசமாக உலகப் பொருளாதாரம் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சிகளால் பாதிக்கப்பட்டமையை அடுத்து, நாடுகளின் கடன் பெறுமதி பெருமளவால் அதிகரித்துள்ளன. அதேவேளை பணவீக்கமும் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நெருக்கடியை கையாள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர், இருப்பினும் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள நாடுகளைப் பொறுத்தமட்டில், அந்நாடுகள் மேற்கொள்ளவேண்டிய தீர்மானங்களும் தியாகங்களும் மிகக்கடினமானவையாகவே இருக்கும் என்று கவலை வெளியிட்டுள்ளார்.





