செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணைக்கு பின்லாந்து எம்.பிக்கள் கோரிக்கை
பின்லாந்து - இலங்கை அரசியல் ஆலோசனைகளின் போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளதா?
செம்மணிபுதைகுழி விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவிலான சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இங்கா ஹோப்சு மற்றும் ஈவா பியூடெட் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச்சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, நேற்றையதினம் பின்லாந்துக்கு விஜயம் செய்து புலம்பெயர் இலங்கையளர்களை சந்தித்திருந்தார். இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் எழுத்துமூலமாக சமர்ப்பிக்கப்பட்ட கேள்வியொன்றில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தலை செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்வியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தகவல்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் செம்மணிப் புதைகுழியிலிருந்து 580க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எச்சங்களில் குழந்தைகளும் அடங்குவர். பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல்கள் போன்ற சான்றுப்பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மோதல் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். பரவலான போர் குற்றங்கள், சித்திரவதைகள் மற்றும் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. அவ்வாறான நிலையில் அவை பற்றிய விசாரணைகள் மிக மெதுவாகவே நகர்கிறது.
மழை மற்றும் வளப்பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டின் இறுதியில் ஏழு மாதங்களுக்கு செம்மணி புதைகுழியின் அகழ்வாராய்ச்சிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் சர்வதேச கண்காணிப்புக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. இலங்கைக்கு சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாடுமாறு செப்டெம்பர் மாத மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வரைவு அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மிக முக்கியமாக, காணாமல் போனவர்களின் வயதான பெற்றோரும் கணவன்,மனைவியும் தங்கள் உறவினர்களின் கதி என்னவென்று அறியாமலேயே இறந்து வருகிறார்கள்.
மரபணு மாதிரிகளை சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் சுயாதீன வழிமுறைகள் அவசியமாகவுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், சர்வதேச நிதியுதவிகள் விலக்கிக் கொள்ளப்பட்டமை உள்ளூர் ஆவணப்படுத்தல் பணிகளை பலவீனப்படுத்தியுள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் பேட்டி காணப்பட்ட குடும்பங்கள் நீதியையும் சர்வதேச விசாரணைகளையும் கோரி நிற்கின்றனர்.
இறுதியாக, பின்லாந்தும் இலங்கையும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் ஆலோசனைக் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கும், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் பின்லாந்தின் திறனை வலுப்படுத்துகிறது.
அந்த வகையில் பின்லாந்து அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றோம். அவை வருமாறு,
சர்வதேச தரங்களுக்கு இணங்க செம்மணி மற்றும் பிற புதைகுழிகள் குறித்த சுயாதீன விசாரணையை பின்லாந்து எவ்வாறு ஊக்குவிக்கிறது?
பின்லாந்து - இலங்கை அரசியல் ஆலோசனைகளின் போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளதா?
இருதரப்பு ரீதியாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவோ தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவோ அல்லது நிதியளிக்கவோ பின்லாந்து தயாராக உள்ளதா? அவ்வாறாயின், அது எவ்வாறு செயல்படுத்தப்படும்? என்பன அவையாகும்.





