ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு தெரிவித்து தேரர்கள் தலைமையில் பேரணி - மகஜர் கையளிப்பு
பொலிஸ் படையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறைக்கு தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டும்;, திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும். நீதிமன்ற தீர்மானங்களுக்கு அமைய சட்ட ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும். அழுத்தங்களுக்கு அடிபணிந்து பொதுமன்னிப்பு வழங்ககூடாது என்று வலியுறுத்தி மக்கள் ஆணைக்கான பிரஜைகள் அமைப்பின் (ஜனவரம புரவசியோ) ஏற்பாட்டில் பௌத்த பிக்குகள் குழு தலைமையில் ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கோட்டைப் புகையிரத நிலைய வளாகத்தில் 17-10-2026அன்று ஒன்றுகூடிய மேற்படி தரப்பினர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் மகஜரொன்றையும் கையளித்தனர்.
குறித்த பேரணியில் பங்கேற்றவர்கள் ஜனாதிபதி அநுரகுமார அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது, அரசியல் இலாபத்துக்கான சூழச்சிக்குள் சிக்கிவிடக்கூடாது, மக்கள் ஆணையை மதிக்க வேண்டும், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், திருடர்களுக்கும், போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் இரக்கம் காண்பிக்ககூடாது என்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
இப்பேரணி முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயகத்தின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
பேரணியில் பங்கேற்ற தேரர்கள் குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனா.
மீகஹஜதுர சீலானந்த தேரர் தெரிவிக்கையில், கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு வந்ததன் பிரதான நோக்கம் ஜனாதிபதியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளிப்பதாகும். ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்த சில தரப்பினர் காவி உடையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் குழப்பமான நிலைமையொன்றை உருவாக்க முயற்சிக்கப்படுவதாக நாம் கருதுகின்றோம்.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி எமது நாட்டின் மக்கள் வழங்கிய மக்கள் ஆணை விசேடமானது. அந்த மக்கள் ஆணையில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அவற்றில் பிரதானமான எதிர்பார்ப்பொன்று நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாகும்.
கடந்த காலங்களில் சட்டம் அநீதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக மக்கள் கருதினர். எனவே, சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இப்போது திருடர்கள், ஊழல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோன்று சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிறுவனங்களும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ் படையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறைக்கு தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியையும் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்குப் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை யார் விரும்பவில்லை, யார் சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள் என்பதை நாம் தனியாகக் கூற வேண்டியதில்லை. மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் எமது பிக்குகள் இன்று மிகவும் அமைதியான முறையில் இங்கு வந்துள்ளோம்.
ஜனாதிபதி மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம் என்றார்.





