ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு - தான் தவறாக வழி நடத்தப்பட்டதாக மைத்திரிபால தெரிவிப்பு
ஞானசார தேரர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய விவகாரத்தில், உரிய அமைச்சின் அனுமதியைப் பெறாமல் எனது கையொப்பம் மாத்திரம் பெறப்பட்டது. நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். இதனால் ஞானசார தேரர் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தவறான நடைமுறையால் மகா சங்கத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கிய நடைமுறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில், அந்த மன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறையில் தொழில்நுட்பக் குறைபாடு காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
ஞானசார தேரர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் முதலாவது வழக்கு B 7417/10 என்ற இலக்கத்தைக் கொண்டது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான இந்த வழக்கில், அரசியலமைப்பின் 105 ஆவது உறுப்புரையும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கு 40042 என்ற இலக்கத்தைக் கொண்டதாகும்.
இந்த இரண்டு வழக்குகள் தொடர்பிலும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்காக உரிய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. இதற்காக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று எனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி எனக்கு அறிவித்திருந்தார். எனினும், உரிய அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக எனது கையொப்பம் மாத்திரம் பெறப்பட்டது. இந்த விடயத்தில் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் சந்தியா எக்னலிகொட மற்றும் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோருடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், மன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறையில் காணப்பட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளின் காரணமாக ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் மகா சங்கத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக நான் வருத்தம் தெரிவிப்பதுடன், அவர்களிடம் மன்னிப்பும் கோருகிறேன் என்று அவ் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





