ஞானசார தேரருக்கு மன்னிப்பளியுங்கள் - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தேரர்கள் போராட்டம்
நேற்று 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பாதயாத்திரையில் மகா சங்கத்தினருடன் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்; பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாத்து காவி உடைக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளுக்கு எழுத்துமூலமாக உத்தரவாதமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூடாரமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தேரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை அடைந்தபோது, முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாக்க தம்மைச் சந்திப்பதற்கு வருகை தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
குறித்த வலியுறுத்தலை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தேரர்களை நேரில் சந்திப்பதற்கான வருகை தந்திருந்தார். அச்சமயத்தில் சிறையில் உள்ள ஞானசாரதேருக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று தேரர்கள் வலியுறுத்தினார்கள். அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் வழங்கினார்கள்.
எவ்வாறாயினும், நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தனக்கு பதிலளிக்க முடியாது என்று சுட்டிக்காட்டி அவர் அவ்விடத்திலிருந்து மீண்டும் செயலகத்துக்கு திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து சுமார் அரைமணிநேரத்துக்கு பின்னர் ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர், ஒருமாத காலத்துக்குள் தேரர்களின் கோரிக்கை சம்பந்தமாக பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிலளித்த தேரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்து அமர்ந்திருந்தவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தேரர்கள் ஞானசார தேரரின் விடுதலை சம்பந்தமாக எழுத்துமூலமான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் இல்லையென்றால் அவரது விடுதலை குறித்த தீர்மானத்தை அறிவிக்கும் திகதியை பகிரங்கமாக குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, மகாசங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 'காவி உடைக்கு நீதி – சுதந்திரத்துக்கான நடைபவனி' கடந்த 10ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நேற்று 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பாதயாத்திரையில் மகா சங்கத்தினருடன் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஞானசார தேரரின் விடுதலைக்கான கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம், சிறைச்சாலைகளில் பௌத்த பிக்குகள் அணியும் ஆடை தொடர்பான நடைமுறைகள் மற்றும் அவர்களின் மத உரிமைகள் தொடர்பிலும் வலியுறுத்தல்களைச் செய்தது.
இந்நிலையில் 15-10-2026அன்று மகா சங்கத்தினருடன் இணைந்து கடவத்தையில் இருந்து தமது இறுதிக்கட்ட பாதயாத்திரையை ஆரம்பித்தனர். இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கொண்டு மழைக்கு மத்தியில் ஜனாதிபதி செயகத்தை மாலையில் வந்தடைந்தனர்.
அங்கு பிக்குகள் பிரித் பாராயணம் செய்து மகா வந்தனம் பாடி 'சாது சாது' என்று முழக்கமிட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் தேரர்களுடன் பொதுமக்களும் இணைந்து கொண்டதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன்இபாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையில் தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு பிக்குகள் பொலிஸாரிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. கனமழைக்கு மத்தியிலும் பிக்குகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜனாதிபதி செயலகப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.





