மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களுக்கான கொடுப்பனவு - அமைச்சரவை அங்கீகாரம்
500,000 மாணவர்களுக்கு 6,000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
2027ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அஸ்வசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அமைச்சால் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயற்படுத்தப்படும்.
அஸ்வசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1,000,000 மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக தலா 6,000 ரூபா வைப்பிலிடப்படும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 500,000 மாணவர்களுக்கு 6,000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
நாட்டின் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் கல்வித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடனும் அரசாங்கம் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





