மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இறுதி தீர்மானம்
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார இலக்குகள் மற்றும் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக இது தொடர்பில் பல முக்கிய விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின்னரே நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு அடுத்தகட்டத் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான வேலைத்திட்டம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர், அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார இலக்குகள் மற்றும் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக இது தொடர்பில் பல முக்கிய விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் மாதத்துடன் தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரே, நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை, மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அரசாங்கத்தின் சொந்தப் பொருளாதார இலக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாணய நிதியத்துடனான எதிர்கால உறவு குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றார்.





