வடக்கு,கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி
இன நல்லிணக்கத்தை எவ்வாறு செயற்படுத்த முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கும் காரியாலயம் செயற்படுவதில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை ஏற்படும் சில அடையாளங்களை காண்கிறோம். வடக்கில் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறும்போது, அதனை தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 28-11-2026 அன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்திருக்கிறார்கள்.
இனவாத பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. 1956லே ஒரு இனத்துக்கு மாத்திரம் சார்ப்பாக செயற்பட்டதால், தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் 1958 இல் யுத்தம் ஆரம்பித்தது.
என்றாலும் நாங்கள் தேசிய ஐக்கியத்தை பாதுகாக்க ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வந்தோம். ஆனால் நீங்கள் அவ்வாறு செயற்படவில்லை. ஒரு கொள்கையில் இருக்கவில்லை.
இந்திய எதிர்ப்பு கொள்கையை மேற்கொண்டுவந்தீர்கள். இந்திய பொருட்களை விற்பனை செய்தவர்களை கொலை செய்தீர்கள். ஆனால் இன்று நீங்கள் அந்த கொள்கையை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அரசாங்கம் தற்போதும் இனவாதத்தை தூண்டி தங்களது வாக்குபலத்தை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. வடக்கில் 30 வருடகால யுத்தம் இடம்பெறும்போது பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கும்போது,மக்கள் விடுதலை முன்னணி தெற்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பித்து.
இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது, யுத்தத்தை வெற்றிகொண்ட ராணுவத்தினரை அனைவரும் வீரர்களென குறிப்பிடும்போது, ஜனாதிபதி, அவர்களை சிப்பாய்கள் என்று அழைத்து வந்ததை கண்டோம். ஆனால் கார்த்திகை நினைவேந்தலை அனுஷ்டிப்பவர்களை வீரர்கள் என்று ஜனாதிபதி கூறுகிறார். அதனால் இப்போதாவது இராணுவத்தினரை கவனித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை ஏற்படும் சில அடையாளங்களை காண்கிறோம். வடக்கில் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறும்போது, அதனை தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை. அதேநேரம் தெற்கில் மகாநாயக்க தேரர்களுக்கு தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். அதனால் அரசியல் இலாபம் நோக்கில் இவ்வாறு செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் முதல் அரச ஊழியர்கள் வீதிக்கிறங்கி வருகிறார்கள். அதனால் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது.
நாட்டில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் இந்த சட்டம் எதற்கு என்று கேட்கிறோம். அதேபோன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டத்தையும் அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன, அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவந்த தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இதுதானா அரசாங்கத்தின் ஜனநாயகமென கேட்கிறோம்.
அரசாங்கம் அடக்குமுறையில் நாட்டை ஆட்சி செய்யவே முயற்சிக்கிறது. அதனாலே இந்த சட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. இந்த இரண்டு சட்டங்களுக்கும் நாங்கள் எதிர்ப்பு. தகவல் அறியும் சட்டத்தை நாங்களே கொண்டுவந்தோம். ஆனால் இன்று ஜனாதிபதி ஊடக பிரிவில் எந்த தகவலையும் பெறமுடியாது.
தேசிய நல்லிணக்க காரியாலயம் மூடப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் இன நல்லிணக்கத்தை எவ்வாறு செயற்படுத்த முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கும் காரியாலயம் செயற்படுவதில்லை.
அதேபோன்று இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி கடந்த வருடத்தைவிட குறைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தை இதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம்
எனவே மக்கள் விடுதலை முன்னணியிடமிருந்தும் விடுதலை புலிகளிடமிருந்தும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாத்த இராணுவத்தினருக்கு எந்த சலுகையும் அரசாங்கம் வரவு,செலவு திட்டத்தில் வழங்கவில்லை. அதேபோன்று பொலிஸாருக்கும் அதே நிலைதான். பொலிஸில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோன்று ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை 2025 ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று இந்த தாக்குதல் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, முன்னாள் பொலிஸ்மா அதிபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சிலருக்காகும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினாலுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது என்றார்.





