விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் தொடர் போராட்டம்
எதிர்வரும் மாதத்தில் சமயப் பணிகளையும் தான நிகழ்வையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலாகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழுவொன்று தொடர்ந்தும் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் நீதிமன்றத் தடை உத்தரவையடுத்து அங்கு கலைக்கப்பட்ட போதிலும், தேரர்கள் தமது கோரிக்கைகளைக் கைவிடாமல் விஹாரமகாதேவி பூங்காவின் பிரதான புத்தர் சிலைக்கு முன்பாக ஒன்றுகூடி விசேட பூஜைகள் மற்றும் பிரித் பாராயணத்தில் ஈடுபட்டு தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சாதரண பொதுமக்கள் தானமாக வழங்கி வருகின்றனர். அத்துடன் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான கூடாரங்களை அமைக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட.
அத்துடன் விஹாரமகாதேவி பூங்காவில் உள்ள பிரதான புத்தரின் சிலைக்கு அடியில் அமர்ந்து பிரித் ஓதி விசேட வழிபாடுகளை மேற்கொண்டும் தேரர்கள் புத்தரின் இதிகாச கதைகள் போதனைகளை கேட்டவண்ணம் போராட்டத்ததை தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் காவன்திஸ்ஸ யானையின் மரணத்துக்கு நீதி கோரிய மற்றொரு குழுவினரும், விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதோடு அவர்களும் கஸ்ஸப தேரர் தலைமையிலான குழுவினருடன் இணைந்து நீதிக்கான கோரிக்கை விடுத்தனர்.
மகாசங்கத்தினரின் கூட்டுத் தீர்மானம்
இதேவேளை போராட்டத்தில் பங்கேற்றுள்ள தேரர்கள் தேரர்களின் எண்ணிக்கையைக் கொண்டு போராட்டத்தை மதிப்பிட முடியாது. தேவையான நேரத்தில் தேவையான எண்ணிக்கையில் தேரர்கள் இணைவார்கள். இந்தபோராட்டமே மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தின் கூட்டு முடிவாகும்.
எதிர்வரும் மாதத்தில் சமயப் பணிகளையும் தான நிகழ்வையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஞானசாரதேரர் விடுதலை செய்யப்படும் வரை இடையறாது போராட்டத்தை முன்னெடுப்போம். பெலவத்தை ஆணைக்கு செயற்படுவோர்களைக் கண்டு அஞசப்போவதில்லை.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அவருக்காக காவி உடையைத் தயாரிக்கும் நடவடிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் காவி உடையை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜனாதிபதியிடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.





