ஹெயிட்டி பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர் இணைப்பு
மூன்று நாட்களுக்குள் இரண்டு தொகுதிகளாக இவர்கள் நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.
ஹெயிட்டி நாட்டில் நிலவும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச 'கும்பல் ஒழிப்புப் படை' பணியில் இணைவதற்காக இலங்கையிலிருந்து சுமார் 500 பாதுகாப்புப் படையினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இரு வேறு குழுக்களாக இவர்கள் ஹெயிட்டி நோக்கிப் பயணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது :
ஹெயிட்டி நாட்டில் செயற்பட்டு வரும் 'கும்பல் ஒழிப்புப் படை' பணியில் இணைவதற்காக, மேலும் 498 இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்குள் இரண்டு தொகுதிகளாக இவர்கள் நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.
அதற்கமைய 173 இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் 45 விசேட அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய 218 பேர் கொண்ட குழுவொன்று, சர்வதேச அமைப்பில் இணைவதற்காக கடந்த நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, 21 அதிகாரிகள் மற்றும் 259 இதர தர நிலைகள் உட்பட 280 இலங்கை இராணுவ வீரர்கள் அடங்கிய மற்றொரு குழு கடந்த 14ஆம் திகதியன்று ஹெயிட்டிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தது.
புதிதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தப் பணியாளர்கள், ஏற்கனவே ஹெயிடியில் சேவையாற்றி வரும் இலங்கை படைப்பிரிவினருடன் இணைந்துகொள்வர். அங்கு அவர்கள் கவச வாகன ரோந்துப் பணிகள் மற்றும் முக்கிய விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.





