பாகிஸ்தானில் 22 சதவீதம் பாசன நீர் பற்றாக்குறை ஏற்படும் என கணிப்பு
போதிய நீர்த்தேக்க வசதிகள் இல்லாமை மற்றும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்திருப்பது ஆகியவையே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பாகிஸ்தானின் சிந்து நதிநீர் அமைப்பு ஆணையம் (IRSA), 2026–27 ரபி பருவத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பாசனத்திற்கான நீர் 22 சதவீதம் பற்றாக்குறையாக இருக்கும் எனக் கணித்துள்ளது. கோதுமை உள்ளிட்ட பயிர்களின் சாகுபடிக்கு இந்தப் பருவம் மிகவும் முக்கியமானதாகும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததால் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய நீர் தடுக்கப்படுவதாக இந்தியா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், இந்தப் பற்றாக்குறைக்கு பாகிஸ்தானின் நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம், போதிய நீர்த்தேக்க வசதிகள் இல்லாமை மற்றும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்திருப்பது ஆகியவையே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த நீர்ப் பற்றாக்குறை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதனால் கோதுமை அறுவடை குறைவதுடன், பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உணவுப் பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.





