ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இரு நிறுவனங்களின் கணிப்புகளின்படியும், இது நடுத்தர ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமாகும்.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சனிக்கிழமை (நவம்பர் 28) இந்திய நேரப்படி மாலை சுமார் 6.45 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 205 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 188 கிலோமீட்டர் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள யெலிசோவோ நகருக்கு வடக்கு-வடமேற்கே சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களின் கணிப்புகளின்படியும், இது நடுத்தர ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமாகும். ஒரே அளவிலான நிலநடுக்கமாக இருந்தாலும், ஆழமற்ற பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களுடன் ஒப்பிடும்போது, இத்தகைய ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பூமியின் மேற்பரப்பில் பொதுவாகக் குறைந்த அதிர்வையே ஏற்படுத்தும்.





